காணிகள் எல்லைக்கல்லிடலினை நிறுத்தி வைக்க எட்டப்பட்ட தீர்மானம் தொடர்பில் மக்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் காணிகள் எல்லைப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் எல்லைக்கல்லிடலினை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் எட்டப்பட்ட போதும் அதன் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் கடந்த 31ம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் எல்லைப்படுத்தும் முகமாக எல்லைக்கல்லிடலினை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் எட்டப்பட்ட போதும் எல்லைக்கல்லிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட வனப்பிரதேசங்களாக எல்லையிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட பயிர் செய்கை நிலங்கள் அதிகளவிலே இவ்வாறு ஏற்கனவே எல்லையிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் எல்லையிடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் மாந்தைகிழக்கு பிரதேசத்தில் வனவளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறிப்பிட்ட சில கிராம அலுவலர்களின் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் பெருந்தொகையான காடுகள் அழிக்கப்ட்டு காணிகள் ஆக்கிரமிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறாட்டிகுளம் பாலபை்பாணி மூன்று முறிப்பு அம்பாள் புரம் வன்னிவிளாங்குளம் வடகாடு போன்ற பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினன்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயிர்செய்கை காணிகளின்றியும் தொழில் வாய்ப்பின்றியும் வாழும் நிலையில் இவ்வாறு வனவளத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்ட வனப்பிரதேசங்கள் என்ற பெயர் பலகைகள் இடப்பட்டுள்ளன.



