வருமான வரி செலுத்துவதை நிறுத்தி விடுவோம்:தொழில் சார் நிபுணர்கள் எச்சரிக்கை
மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது, அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டால், வருமான வரியை செலுத்த போவதில்லை என தொழில் சார் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் சார் நிபுணர்களுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் சம்பந்தமான 5 அடிப்படை கோரிக்கையை தொழில் சார் நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகுதல், 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வருதல் உட்பட 5 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
என்ன நடக்கின்றது என்பதை நாட்டின் தொழில் சார் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நாட்டின் நிலைமை இப்படியே நீடித்துச் சென்றால், வருமான வரி செலுத்துவதை நிறுத்த போவதாக அவர்கள் எச்சரித்தனர்.
அத்துடன் போராட்டத்தில் இறங்க தயாராக இருப்பதாகவும் கூறினர். அரசாங்கம் இந்த விடயங்களை தொடர்ந்தும் கேலியாக எடுத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல கூடாது என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.
தாம் முன்வைத்துள்ள மாற்றங்களை மேற்கொண்டால், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதில் உதவவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
மாற்றங்களை செய்யாது, தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால், தொழில் சார் நிபுணர்களிடம் இருந்து பயன்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.