நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக, பிரதேச சபை ஊழியர்களுக்கு இன்று காலை பி.சி.ஆர். பரிசோதனை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் இந்த பி .சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த வாரம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்புகளை கொண்டிருந்த நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அந்த அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்குமான பி.சி.ஆர். பரிசோதனைகளே இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 4 நபர்கள் மாத்திரமே நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவராக கருதப்படுகின்றனர்.
ஏனையவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் சுமார் 108 நபர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 232 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.