ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள் அம்பலம்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் பிரச்சினைகள் பற்றி கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்றுமுன் தினம் (06.12.2022) கூடிய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக நாடாளுமன்ற முகப்புத்தக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் 5 வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்காய்வு மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு கூடியுள்ளது.
இதில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைச் சட்டம், அதன் நோக்கம், பணி, நோக்கம், இதனை அடைவதற்கான செயற்பட்ட விதம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
திட்டமிடுதலில் ஏற்பட்டுள்ள பலவீனம்
இந்நிலையில் இந்தச் சட்டத்தின் பிரகாரம் நிர்வாக சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது வைத்தியசாலை பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமனங்கள் மேற்கொள்வது ஆர்வத்திற்கு முரண்பாடானதாக இருந்தால் அது குறித்தும் கவனத்தில் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டம் சரியான முறையில் இன்மையால் திட்டமிடுதலில் கடுமையான பலவீனம் உள்ளது என்பதும் இங்கு புலப்பட்டது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக மாறுவதற்கான இலக்கை எட்டுவதற்கு 2 மாதங்களுக்குள் பொருத்தமான மூலோபாயத் திட்டங்களைச் சமர்ப்பிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.
நிர்வாகச் சிக்கல்கள்
நிதி முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், கொள்வனவு முகாமைத்துவம், விற்பனை மற்றும் வர்த்தக அபிவிருத்தித் திட்டங்கள், கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட நிர்வாகச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு தயாரிக்கப்படும் திட்டத்தை கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணியின் பரப்பளவு அடையாளம் காணப்பட வேண்டும் எனவும், அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, பல்வேறு ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளபோதும் சேவை பூரணப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களுக்கான பணத்தை மீண்டும் அறவிட நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.
விசேட கணக்காய்வு அறிக்கை
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பெருமளவிலான நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுவதாக கோப் குழு கண்டறிந்துள்ளது. அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், அதனைக் கையாள்வதற்கு கோப் குழுவின் உப குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உபகுழு மருத்துவமனைக்குச் சென்று கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக விசேட கணக்காய்வு அறிக்கையை தயாரிக்குமாறு கோப் குழு, கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தது.
பணிப்பாளர் குழுவில் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் இருக்க வேண்டும் என்றும், அதன் செயல்திறனை மேம்படுத்த பல துணைக் குழுக்களை நியமித்து அவை ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நில அளவையாளர் நாயகத்தினால் வைத்தியசாலையின் நிலப்பரப்பு நில அளைவை செய்யப்பட்டிருந்தபோதும், மீண்டும் தனியார் நில அளவையாளரினால் வைத்தியசாலையின் மருத்துவமனை மீண்டும் அளவை செய்யப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறு மீண்டும் நில அளவை மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் சட்ட அதிகாரிக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவுக்காக 4.2 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட சத்திரசிகிச்சைப் பொருட்களில் 80% காலாவதியான விடயத்தில், பொறுப்பான அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கோப் குழு கேட்டறிந்தது.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது.
கோப் குழுவில் தீர்மானம்
கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு மென்பொருளுக்கு 1.8 மில்லியன் ரூபாவும், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கு 19.7 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டமை குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்கு கோப் குழுவிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, வைத்தியசாலையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகத்துக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு மூன்று மாதங்களில் மீண்டும் அழைப்பதற்கும் கோப் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த ஹேரத், சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்கிரமரத்ன, நிமல் லான்சா, எஸ். எம்.எம்.முஷாரப், ஜகத் குமார சுமித்ராராச்சி, (மேஜர்) சுதர்சன் தெனிபிட்டிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன், கணக்காய்வாளர் நாயகம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் மற்றும் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
