இலங்கையில் வரிகள் வசூலிப்பதில் நிலவும் சிக்கல்கள்: வருவாய்துறை எச்சரிக்கை
இலங்கையில் வரிகளை வசூலிப்பதில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் 1,667 பில்லியன் ரூபாய்களாக நிர்ணயிக்கப்பட்ட திருத்தப்பட்ட வருவாய் இலக்கை வசூலிக்க முடியாது என்று திறைசேரிக்கு உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எச்சரிக்கையாக அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி முன்னிலையில் திறைசேரியின் அதிகாரிகளைச் சந்தித்த உள்நாட்டு வருவாய் திணைக்கள அதிகாரிகள், அடுத்த ஐந்து மாதங்களில் அடைய வேண்டிய புதிய வருவாய் இலக்கை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திணைக்களம், இதுவரை சுமார் 700 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்பட்ட திருத்தப்பட்ட இலக்கின்படி 1,000 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்படவேண்டும் என்று திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி வசூல் குறித்த விழிப்புணர்வு
மேலும், வருவாய் இலக்கை எட்டுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களில், பணியாளர் வெற்றிடங்கள், புதிய வரிக் கோப்புகளைத் திறக்க உள்கட்டமைப்பு மற்றும் நிதி இல்லாமை, வரி வசூல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை ஆகியவை அடங்குகின்றன.
உள்நாட்டு வருவாய் திணைக்களம் கிட்டத்தட்ட 900 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது.
இந்த பணியாளர்களால் சுமார் 1.2 மில்லியன் புதிய வரிக் கோப்புகளைக் கையாள்வது சாத்தியமில்லை.
இந்தநிலையில் புதிய கோப்புகளைத் திறப்பதற்கும், அதிகாரிகள் மற்றும் பிற நிபுணர்களுக்கான கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும், ஊடகப் பிரசாரத்துக்கும் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்காக, செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வின் போது, இலங்கை கடன் மறுசீரமைப்பை அடைய வேண்டும் என்ற நிலையில், வருவாய்துறையில் நிலவும் பிரச்சினை வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |