இலங்கையில் புற்று நோய் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பத்திரிகை ஒன்று இது தொடர்பான செய்தியினை வெளியிட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள முதன்மையான சிகிச்சை மத்திய நிலையமாக மஹரகமயில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலை விளங்குகிறது.
கடந்த சில மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக வருகைதரும் நோயாளர்க ளுக்குத் தேவையான சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நோயாளிகள் கூறுவதைப் போல் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதா என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் விஜித் குணசேகர தெரிவிக்கையில், நோயாளர்கள் கூறும் மருந்து வகைகள் வைத்தியசாலையில் உள்ளதாக பதிலளித்தார்.
எனினும், தனிப்பட்ட நோயாளியின் பெயரில் கொண்டுவரப்படும் சில மருந்து வகைகள் கிடைப்பதில் சற்று தாமதம் நிலவுவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, பதுளை பொது வைத்தியசாலையிலும் புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.
