சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்: ஒரு மாதமாகியும் விசாரணை அறிக்கை தாமதம்
இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, நிதி அமைச்சினால் ஒரு குழு நியமிக்கப்பட்டு ஆறு வாரங்களாகியும், இன்னும் அதன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த விசாரணை அரைவாசி கூட முடியவில்லை என்று சுங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
விசாரணையை முடிப்பதில் தாமதம்
குறித்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையின் அளவைக் கருத்தில் கொண்டு குழு முழுமையான விசாரணையை நடத்த வேண்டியுள்ளது எனவே, விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுவது நியாயமற்றது என்று சுங்கத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
323 கொள்கலன்களின் விடுவிப்பை விசாரிப்பதுடன் மட்டுமல்லாமல், கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் தொடர்ந்து ஏற்பட்ட தாமதங்களை விசாரிக்கவும் இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
இந்த தாமதம், கடந்த ஜனவரி மாதம் நெருக்கடிக்கு வழிவகுத்தது, பல ஆயிரம் கொள்கலன்கள் அகற்றப்படாமல் துறைமுகத்தில் சிக்கிக்கொண்டன.
எனவே இது வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலைச் செயலா என்பது ஆராயப்படவுள்ளது.
இதேவேளை ஆய்வு இல்லாமல் அகற்றப்பட்ட 323 கொள்கலன்கள் அரசாங்க பிரமுகரின் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும் மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசூப், இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே மறுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
