முதலீட்டாளர்களை நடிகைகளை பயன்படுத்தி மிரட்டிய பிரியமாலி-வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்
திலினி பிரியமாலியிடம் 75 கோடி ரூபாவை முதலீடு செய்து, நடிகைகளுடன் சம்பந்தப்பட்டு மிரட்டல்களுக்கு உள்ளான கலாநிதி பட்டம் பெற்றவர் எனக் கூறப்படும் வர்த்தகர் நேற்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
பிரபல நடிகைகளை பயன்படுத்தி மிரட்டல்
பிரபல நடிகைகளை பயன்படுத்தி இந்த வர்த்தகர் மிரட்டப்பட்ட விதம் சம்பந்தமான முக்கிய விபரங்களை அவர், குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பிரியமாலியின் ஒப்பந்தத்தை பெற்று, நபர்களுக்கு மிரட்டல் விடுக்க காணொளி மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிய நடிகைகள் சம்பந்தமாக சிறப்பு விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைகளை நடத்த பாதுகாப்பு தரப்பினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மோசடியை பிரியமாலி தனித்து மேற்கொள்ளவில்லை எனவும் 2015 ஆம் ஆண்டு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக விளங்கிய மேர்வின் சில்வாவுடன் நெருக்கமாக இருந்துக்கொண்டு பிரியமாலியின் கணவர் என அறிமுகப்படுத்தி,மோசடியை மேற்கொள்ள வழியை ஏற்படுத்திக்கொடுத்த இசுரு பண்டார என்ற நபரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மோசடி செய்த பணம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் பெட்டகத்தில் பணமில்லை
பிரியமாலி, மோசடி செய்த பணத்தை வைத்திருந்ததாக கூறப்படும், அவர் அலுவலகத்தை நடத்தி வந்த உலக வர்த்தக மத்திய நிலையத்தின் 34 வது மாடியில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் அவரது பெட்டகத்தை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று திறந்து பார்த்த போது அதில் பணம் எதுவும் இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் மூன்று வங்கிக் கணக்குகளில் சுமார் ஒரு லட்சம் ரூபா மாத்திரமே இருப்பதாக விசாரணையாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், பிரியமாலியுடன் பழகிய நபர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்கள் புதிதாக சம்பாதித்த சொத்துகக்ள் தொடர்பாக விசாரணைகளை நடத்த குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



