கோவிட் நோயாளிகளிடம் அநீதியான முறையில் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் வைத்தியசாலைகள்
பல தனியார் வைத்தியசாலைகள் கோவிட் தொற்றாளர்களிடம் அநீதியான முறையில் பணத்தை அறவிடுவதால், அதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்களுக்கு பெரிய சிகிச்சைகள் எதுவும் நடத்தாத போதிலும் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது பெரிய கட்டண சீட்டை வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் இருந்து வெளியேறலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் சில தனியார் வைத்தியசாலைகள், பல்வேறு உடன்படிக்கைகள் குறித்து தெரிவித்து, பல நாட்கள் வைத்தியசாலையில் தங்க வைத்து அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.
இந்த அநீதியான கட்டண வசூலிப்பை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும். கோவிட் தொற்றுக்கு உள்ளான போது நானும் இப்படியான அநீதியான வசூலிப்புக்குள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்.இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப எண்ணியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரமான தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில் பணத்தை சம்பாதிக்க முயற்சிக்கும் தனியார் வைத்தியசாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.