திருகோணமலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று(26.5.2026) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த போராட்டத்தின்போது 20இற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் ஆளுநர் செயலகத்தின் முன்பாக தரித்து நிறுத்தப்பட்டு தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுபடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள திட்டமிடல் பணிப்பாளர், அதிகார சபையின் தலைவர் ஆகியோர் அரச நடைமுறைகளையும், நீதிமன்ற கட்டளையையும் கருத்தில் கொள்ளாது தன்னிச்சையாக தங்களுக்கு வேண்டிய 3 பேருந்துகளை குறித்த உட்புகுத்துவதற்காக நேரத்தைக் குறைத்து 14 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருக்கின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றியுள்ளனர்.

அதனை நேற்றையதினத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வருமாறும் கோரியுள்ளதாகவும் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.