கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
கொழும்பு (Colombo) புதிய மகசின் சிறைச்சாலையில் பணி புரியும் இரு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சிறைக்காவலர் மற்றும் களஞ்சியசாலை காப்பாளர் ஆகியோரே மேற்கண்டவாறு இடைநீக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதியுடன் பிரதான சிறைக்காவலரும் காப்பாளரும் முறையற்ற தொடர்பைப் பேணி இரகசியமாக சிறைச்சாலைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்து கைதிகளுக்கு வழங்கியுள்ளதாக சிறைச்சாலை தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கைகள்
பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 04ஆம் திகதி அன்று நடத்திய விசாரணையின் அடிப்படையில், குறித்த இரு அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் சிறைச்சாலை தெரிவித்துள்ளது.
அதேவேளை, இதுபோன்ற சட்டவவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.