பிரியமாலிக்கு ரகசியமாக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி - CIDக்கு விரையும் பிரபலங்கள்
பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கையடக்கத் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டதாகவும், அது எவ்வாறு அவருக்குக் கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பெண் வழங்கிய தொலைபேசி
தற்போதைய விசாரணையில் சந்தேக நபருக்கு கைத்தொலைபேசியை வேறு ஒரு பெண் வழங்கியது தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் தற்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் மேற்கு கோபுரத்தின் 34வது மாடியில் சொகுசு அலுவலகம் நடத்தி வந்த இந்த பெண், 226 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலைகளை மதிப்பிழக்கச் செய்தமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டையடுத்து அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தயாசிறி முறைப்பாடு
தற்போது, இவருடன் இணைந்து செயற்பட்டதாககு் கூறப்படும் பலரது பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இதேபோன்ற முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை, சிங்கள தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மதில்லே பஞ்சலோக தேரரும், திலினி பிரியமாலியுடன் தொடர்பு கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பட்டியலில் தனது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குச் சென்றுள்ளார்.
சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இதேபோன்ற முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அரசியல் ரீதியாக வெளியிடப்பட்ட பொய்யான தகவல்
திலினி பிரியமாலியுடன் பல கலைஞர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரபல நடிகை தமிதா அபேரத்ன அதற்கு பதிலளித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்துள்ளார்.
இந்த தகவல் அரசியல் ரீதியாக வெளியிடப்பட்ட பொய்யான தகவல் எனவும், தமக்கும் தனது வர்த்தகங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தமிதா அபேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
தான் கலந்துகொண்ட பிறந்தநாள் விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடையின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.