சிறைச்சாலை வன்முறைகள் குறித்து ஜெனீவாவில் விவாதிக்க திட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்
இந்த அமர்வின் போது, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களில் பல கைதிகள் கொல்லப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்திருந்தனர்.
கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஜெனீவா அமர்வுகளில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வு அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.