முல்லைத்தீவில் விமர்சனத்திற்குள்ளாகும் பாடசாலை அதிபரின் செயற்பாடுகள்: கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்
முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் அப்பாடசாலையின் நலன்விரும்பிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் கல்வித்துறை அதிகாரிகள் கவனமெடுப்பதாக தெரியவில்லை. ஆயினும் இது தொடர்பில் பெற்றோர்கள் கூடிய கவனமெடுத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை தொடர்பில் அதிபரின் செயற்பாடுகளினால் இதுவரையும் இருந்து வந்த பாடசாலைச் சூழல் பாரியளவிலான மாற்றங்களை சந்தித்து வருகின்றது.
எனினும் இந்த மாற்றங்கள் மெதுவாக நடைபெற்று வருவதால் மக்களின் கவனத்தை அதிகம் பெறுவதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைபாடுகள்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட முல்லைத்தீவு கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் இந்த பாடசாலையில் இருந்து வந்த குறைபாடுகள் தொடர்பாக பழைய மாணவர்கள் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தனர்.
இருப்பினும், அவை தொடர்பில் உரிய தரப்பினர் கருத்தில் எடுத்து அவற்றை சீர்செய்து கொள்ள எத்தகைய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
350 வரையான மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலை தரம் 1 முதல் தரம் 11 வரை மாணவர்களை கொண்டுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் பொருத்தப்பாடான வினைத்திறன் மிக்க வெளிப்படுத்தல்களுக்கான செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை.
பாடசாலைச் சூழலும் கற்றலுக்கேற்ற வகையில் பேணப்பட்டிருக்கவில்லை என இப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவருடன் உரையாடிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் சமூகத்தால் இனம் காட்டப்படும் இந்த பழைய மாணவரும் பாடசாலை அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
பாட ஆசிரியர்கள் இல்லை
முல்லைத்தீவு நகரில் இருந்து தெற்கு நோக்கிய திசையில் ஆறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பாடசாலையில் பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத ஒரு சூழல் இருந்து வருகின்றது.
2024 ஆம் கல்வியாண்டின் ஆரம்பம் முதலே கணித பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. நீண்ட காலமாக கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்திருந்த ஆசிரியர் இடமாற்றலாகி சென்று விடவே அப்பாடத்திற்கான வெற்றிடம் தோன்றியுள்ளது.
அண்மைய நாட்களில் விஞ்ஞான பாடத்திற்குரிய ஆசிரியை நீண்டகால சுகவீன விடுமுறையைப் பெற்றுள்ளார்.
இத்தகைய சூழல் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (க.பொ.த.சா/த) மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவருட காலமாக கணித பாடமும் இனிவரும் ஒரு பாடசாலை தவணைக் காலம் விஞ்ஞான பாடமும் கற்றுக்கொள்ளும் சூழலை இப்பாடசாலையின் மாணவர்கள் இழந்து விடுகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அதிபரின் செயற்பாடுகள்
நீண்ட நாட்களாக பாடசாலையில் இருந்து வந்த கற்றலுக்கு பொருத்தமற்ற சூழல்களை இனம் கண்ட பாடசாலை அதிபர் அவற்றை தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம் மெல்ல மெல்ல சீர் செய்து வந்திருந்தார்.
அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் உற்று நோக்கி வந்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் அதிபருடன் கைகோர்த்து பயணிக்க ஆரம்பித்திருந்தனர் என அப்பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது அக்கிராமவாசியொருவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு ஆசிரியர்களை வலயக்கல்வி அலுவலகம் ஊடாக பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலை அதிபர் ஈடுபட்டுள்ளார்.
அத்தோடு குறித்த பாடங்களில் கற்பித்தல் அனுபவம் உடைய, சேவை நோக்கில் பணியாற்றக் கூடியவர்களிடம் இருந்து உதவிகளை கோரி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகின்றார் என அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.
கல்வியதிகாரிகள்
பொறுப்பற்று இருக்கும் பாடசாலை அதிபர்களிடையே பாடசாலையின் குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை சீர் செய்வதோடு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இருக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளும் அவரின் ஆற்றல் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்பாடசாலையின் அதிபரின் முயற்சிக்கு கல்விசார் அதிகாரிகள் இதுவரை வழங்கி வந்த ஆதரவை இன்னும் அதிகமாக்கிக் கொள்ளும் போது மாணவர்களிடையே எதிர்காலமும் சிறப்பாக அமையும் என பெற்றோர்களிடையே மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது.
பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இப்பாடசாலையின் அதிபர் தொடர்பில் ஒத்த பொதுக் கருத்து இருப்பதோடு அது அவரின் செயற்பாடுகளை மெச்சுவதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அணுகலானது ஈழத்தமிழச் சமூகத்திற்கு நல்லதொரு எதிர்காலம் உருவாகி வருவதன் வெளிப்பாடாக கொள்ள முடியும்.