நாடாளுமன்றில் சோகமாக இருக்கும் பிரதமர் மஹிந்த? காரணத்தை வெளியிட்ட குமார வெல்கம
குறைந்த பட்சம் பிரதேச சபை உறுப்பினர் பதவியை கூட வகிக்காத நபருக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டாம் என தான் ஆரம்பத்திலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தினேன். தற்போது தான் கூறியது சரியானது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்திய வைபவத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து பேசும் உரிமையை பிரதமருக்கு வழங்குவதில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாடாளுமன்றத்தில் நாங்கள் அமர்ந்திருக்கும் போது பிரதமரின் முகத்தில் அதனை நாங்கள் பார்க்கின்றோம்.
நான் 40 ஆண்டுகள் பிரதமருடன் வாழ்ந்த மனிதன். இதனால், அவரது முகத்தை பார்த்து என்னால் கூற முடியும். அப்படியான காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
இராணுவத்தில் இருந்தவருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டாம் என நானே முதலில் கூறினேன். அவர்களால் கட்டளையிட மாத்திரமே முடியும். பிரதேச சபை உறுப்பினராக கூட பதவி வகிக்காத ஒருவருக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டாம் என நானே சத்தமிட்டு கூறினேன். அது தற்போது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களே இது பற்றி எம்முடன் அதிகம் பேசுகின்றனர். எனக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதா அவர்கள் கூறுகின்றனர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.