கொழும்பு கடற்பரப்பில் தீப்பிடித்த கப்பல்! பிரதமர் மஹிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
கப்பல் தீவிபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கண்டறிய இன்று (29) முற்பகல் உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடல் சூழலைப் பாதுகாக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்குக் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அறிவித்துள்ளார்.
கடல் மாசுபாட்டைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான
நாலக கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த
உளுகேதென்ன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர
அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் த சில்வா, பணிப்பாளர் நாயகம்
பிரசாத் ரணவீர, கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர
உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்.



