ஜேர்மனியில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வு - போராட்டத்தில் குதித்த மக்கள்
ஜேர்மனியில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே அந்நாட்டின் எதிர்கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் அதிகரித்து வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
இதனால் ரஷ்யாவிடம் எரிவாயு இறக்குமதியை நம்பி இருந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தன.
பிரித்தானியாவில் பொருளாதார மந்த நிலை
பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்ததுடன், பண வீக்கமும் அதிகரித்துள்ளது. அத்துடன், டொலருக்கு நிகரான பவுண்ட் பெறுமதியும் சரிவை சந்தித்துள்ளது.
மேலும், பிரித்தானியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
அதேபோன்று ஜேர்மனியின் நுகர்வோர் விலை குறியீடு செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10 வீதம் உயர்ந்துள்ளது. அத்துடன், ஜேர்மனியில் 1951ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பணவீக்கம் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.