எரிபொருளுக்கான விலை அதிகரிக்கலாம் - ஆனால் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது! ஜனாதிபதி வலியுறுத்தல்
நாட்டில் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டாலும், எந்தவொரு கட்டத்திலும் தட்டுப்பாடு எற்பட இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அதன்போது விலை உயர்வு மற்றும் நாடு எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து ஆழமாக அலசப்பட்டது.
எரிபொருளுக்கான விலை
அதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த ஏப்ரல் மாதம் வரை இந்த நாட்டில் இறக்குமதி செலவு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் டொலர் கையிருப்பை பாதுகாக்கும் வகையிலேயே, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி தட்டுப்பாடு அல்லது உரத்தட்டுப்பாடு போன்ற நிலைமை ஏற்பட்டால் முழு நாட்டினதும் இருப்புக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என்பதால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சந்தையில் விலை தொடர்ந்து உயர்ந்தாலும் உரிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் சில விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு மேலும் அறிவித்துள்ளார்.