அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான்! அடித்துக் கூறுகின்றார் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி
தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி காரணமாக, அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று அர்ச்சுனா ராமநாதன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாமல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டின் தற்போதைய போக்கின் மீதான பொதுமக்களின் அதிருப்திஇ ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்காளர்களைத் தூண்டக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், 2029-ல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என ராமநாதன் அர்ச்சுனா கணித்துள்ளார்.

'இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2029-ல் நாமல் வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த விருப்பமும் இல்லை.
ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையில், மக்கள் ராஜபக்சக்களிடமே மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமர சம்பத்தின் பேச்சுத் திறமை
தொடர்ந்தும் பேசிய அர்ச்சுனா, தற்போதைய எதிர்க்கட்சியையும் விமர்சித்தார். ஒரு திறமையான எதிர்க்கட்சித் தலைவர் வலிமையானவராகவும், வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். '
நமது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர் மிகவும் மென்மையானவர். நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, பூங்கொத்துகளை வீச முடியாது; நீங்கள் செங்கற்களை வீச வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டில் தற்போது வலிமையான எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய அதே வேளையில், தலைமைத்துவத்திற்குத் தேவையான மற்ற குணங்கள் அவரிடம் இல்லை என்றும் அர்ச்சுனா எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜயின் தேர்தல் வெற்றி
நாமல் ராஜபக்ச ஒரு பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவராக இருப்பாரா என்று கேட்கப்பட்டபோது, நாமல் ராஜபக்சவுக்கு அந்தப் பதவி தேவையில்லை என்று அர்ச்சுனா மறுத்துள்ளார்.

'நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வேண்டிய அவசியமில்லை. அவர் ஜனாதிபதியாகிவிடுவார். இதை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் நான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் நான் சொன்னது நடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்' என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
இந்திய நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் ஜோசப்பின் அரசியல் எழுச்சியைத் தான் கணித்தபோது, முன்பு தான் 'பைத்தியக்காரன்' என்று நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் விஜய் ஜோசப் பின்னர் தேர்தல் வெற்றியையும் அடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.