சிலிண்டரின் விலை 8000 ரூபாவிற்கு செல்லும்: ரணில் எச்சரிக்கை
கைத்தட்டல் வாங்குவதற்காக போலி பிரசாரம் செய்யும் வேட்பாளர்களை நம்பினால் சிலிண்டரின் விலை எதிர்காலத்தில் 8000 ரூபாவிற்கு செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
10 ரூபாய்க்கு அத்தியாவசிய பொருட்களை தருவேன் என்று நான் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
பண்டாரவளையில் இன்று (31.08.2024) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தொழில் வாய்ப்பு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜேவிபி தொழில் வங்கியை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்களை அறிவிப்போம் என்று சொல்கிறது.
அதற்காக முதலில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் மறந்து போயுள்ளனர்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 41 சொற்கள் கூட இளையோரைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
இவ்வாறானவர்களிடம் நாட்டை கையளிக்க வேண்டுமா? நாம் சுற்றுலாவை பலப்படுத்துவோம். உள்ளூர் மக்களை விடவும் அதிகமாக சுற்றுலா பயணிகள் இங்கு நடமாடும் அளவிற்கு சுற்றுலா துறையை ஊக்குவித்து பண்டாரவளை பகுதியை மேம்படுத்துவோம்.
பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பு
நான் டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாச போன்ற ஜனாதிபதிகள் வழியை பின்பற்றி நடக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் ஆர்.எம்.அப்புஹாமியுடன் கட்சி சார்பில் பல கூட்டங்களை இந்தப் பிரதேசத்தில் நடத்தியிருக்கிறேன்.
கட்சிக்காக பாடுபட்டிருக்கிறேன். அன்று பிரேமதாச ஜனாதிபதி பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுகொண்டு தொழில் வலயங்களை அமைக்க முன்வந்த போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.
அப்போது அவரை நான் தான் பாதுகாத்தேன். ஆனால் சஜித் பிரேமதாச இன்று ஐக்கிய தேசிய கட்சியை உடைத்துவிட்டார். அதனால் உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்கள் என்னோடு வந்து இணையுங்கள்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |