உணவு பொதியின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா! வெளியாகியுள்ள தகவல்
நாளை (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து உணவு பொதியின் விலைகளை குறைப்பது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாளை (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பதற்கு மறுப்பதற்கான காரணம்
இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில்,
“நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும், நகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு குறித்த நன்மை கிடைப்பதில்லை.
இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது.
எரிவாயு விலை குறைக்கப்பட்டது என்பதற்காக உணவுப் பொருட்களின் விலையை எந்த வகையிலும் குறைக்க மாட்டோம். ஏனென்றால் அன்று எரிவாயு விலை குறைக்கப்பட்ட போது, தேனீர் விலையை 30 ரூபாய் குறைப்பதாகச் சொன்னோம். உணவு விலையை 10 சதவீதத்தால் குறைப்பதாக கூறினோம்.
கிராம மக்களின் பிரச்சினை
எனினும், நகரத்தின் பொருட்கள் விலைகளை கிராமத்துக்கும் வழங்க கூறினோம். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில் பருப்பு 410 ரூபாய். ஆனால் கிராமத்தில் இன்னும் 600 ரூபாய். இதற்கமைய 200 ரூபாய் அதிகமாக விற்கப்படுகின்றது.
அந்த 200 ரூபாய் கிராமத்தில் உள்ள உணவகங்களை பாதிக்கின்றது. இன்று அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்பு 250 ரூபாய். இது ஒரு தீவிர பிரச்சினையாகும்.
இந்த விலை குறைப்பின் நன்மை கிராம மக்களுக்கும் கிடைக்க முறைமையொன்று உருவாக்கபட வேண்டும்.”என கூறியுள்ளார்.