நாடு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலை: அதிகரித்துள்ள மீன்களின் விலை
நாடு முழுவதும் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அம்பாறை (Ampara) மாவட்டத்திலும் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இதற்கு சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் நிலவு வெளிச்சம் போன்ற காரணத்தினால் மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம்
கடும் காற்று காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை, கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ விளமீன் 1600 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாயாகவும் நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது கடற்றொழிலாளர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
குறிப்பாக கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வேளை இப்பகுதியில் கடற் கருவாடுகள் மற்றும் ஆற்றுக்கருவாடுகளுக்கு கேள்வி நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |