மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பதால் எதிர்ப்பு உணர்வே அதிகரிக்கும் : வி.எஸ் சிவகரன்
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை தடுப்பதால் மேலும் மேலும் அதன் மீதான பற்றும், உணர்வும், தமிழ்த் தேசியத்தின் மீதான ஆழமான பார்வையுமே அதிகரிக்கும் எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் இந்த ஆண்டும் மாவீரர் துயிலுமில்லங்களில் நடத்தக்கூடிய சூழல் இல்லாத ஒரு நிலைமையைத் தான் அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்குத் தடை கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாவீரர் நாள் நிகழ்வுகளை வடக்கு, கிழக்கில் நடத்த அனுமதித்தால் சிங்கள மக்களின் ஆதரவுகளை ராஜபக்ச அரசு இழக்க நேரிடும் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை அரசு கடைப்பிடிக்கின்றது.
சாதாரண ஆலய நிகழ்வுகள், மரம் நடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆட்காட்டி வெளி துயிலுமில்லத்தில் இருந்த பொதுச்சுடர் ஏற்றும் பீடம், வரவேற்பு வளைவு உடைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் அல்லது விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்களுடைய நினைவுகளை இல்லாமல் செய்வதன் ஊடாக ஒரு யுத்தம் நடந்தது, இனப்படுகொலை விவகாரம், சாட்சியங்கள் இருக்கக் கூடாது என்பதிலே அரசு கவனமாக உள்ளது.
இலங்கை அரசு மாவீரர் நினைவு நிகழ்வைத் தடுக்கலாம். ஆனால் தமிழ் மக்களுடைய
நெஞ்சங்களில் இருக்கின்ற மாவீரர்கள் என்கின்ற காலத்தால் அழியாத இலட்சிய
வேட்கையினுடைய விடுதலை வீரர்களுடைய எண்ணப் பிரதிபலிப்பையும் செயற்பாட்டையும்
அழித்து விடவோ, மாற்றி விடவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan