கோலாகல கொண்டாட்டமாகும் சுதந்திர தினம்! மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் பகிரங்க கேள்வி
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாது வெறுமனே ஒரு கோலாகல கொண்டாட்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை மறுப்பதாக மலையக காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயப்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சுதந்திர தினம் வெறுமனே கொண்டாட்டமாக கொண்டாடப்படுகின்றதா அல்லது பெற்ற சுதந்திரத்தினை அனுபவிக்கக்கூடிய நாளா? என கேள்வியினை கேட்கத் தோன்றுகிறது.
கடந்த காலங்களில் மக்களின் நலத்திற்காக மக்களுடைய சுதந்திரத்திற்காக நாங்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை செய்து வந்தோம். ஆனால் இன்று கோவிட் தொற்று பரவல் காரணமாக அதனை செய்ய முடியாது.
எனவே தான் ஊடகங்கள் வாயிலாக செய்தியினை வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறோம். பெருமளவாக 74 வருடங்கள் இந்த சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் மலையக மக்கள் அந்த சுதந்திரத்தினை அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.
ஏன் என்றால் இவர்களுக்கு காணியுரிமையில்லை, வீட்டு உரிமையில்லை, அரச சேவையினை பெற்றுக் கொள்ளுகின்ற உரிமையில்லை. இன்னும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் ஒரு அடிமையாக கொண்டு செல்கின்ற ஒரு நிலைமையினை தான் பெருந்தோட்ட சமூகத்திற்கு இருக்கின்றன.
ஆகவே இந்த சுதந்திரதினத்தினை முற்று ழுழுவதுமாக கொண்டாட முடியாதவர்களாகவும், அதிலே உள்வாங்கப்பட முடியாதவர்களாகவும் இருக்கின்றோம். மலையக மக்கள் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை தான் இன்னும் இருக்கின்றது.
நாங்கள் பாடப்புத்தகங்களில் இந்த சுதந்திரத்தை பற்றி கற்றிருக்கின்றோம் அதைப் பற்றி கலந்துரையாடியிருக்கின்றோம். ஆனால் அதனை இன்று வரை அனுபவிக்க முடியாத மக்களாக நாம் இருந்து வருகிறோம்.
இந்த நாட்டில் சுதந்திர தினம் களியாட்டமாக கொண்டாடப்படுகின்றதே தவிர இந்த நாட்டில் வாழுகின்ற மலையக மக்களாக இருக்கலாம், வடக்கு கிழக்கு மக்களாக இருக்கலாம், சிறுபான்மை மக்களாக இருக்கலாம் இன்னும் இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன. சுதந்திர தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மலையக மக்கள் வாழ்ந்த காணியினை பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
76 வருடங்களுக்கு முன் தொடக்கம் காணியுரிமையினை கேட்டு இந்த மக்கள் போராடி வருகின்றனர். அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் 50 வருடங்களாக எமது மக்கள் வாழ்ந்த காணியினை பறிப்பதற்கான பல சூழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
50 வருடமாக வாழ்ந்து வரும் வீடுகளின் கதவுகளில், காணியினை விட்டு வெளியேறுமாறு ஒட்டப்பட்டுள்ளது. மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாது வெறுமனே ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை நாங்கள் மறுக்கின்றோம்.
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



