இலங்கையில் நடக்கும் வேடிக்கை! - தமிழர் தரப்பு செய்யவேண்டியது என்ன?
இலங்கை மக்கள் 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்றை சந்தித்தனர். கோவிட் தொற்று பெரும் ஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில் வெற்றிகரமாகத் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியவர்கள் என்கிற பெருமையையும் இதனூடாகப் பெற்றனர்.
தம் உயிரைப் பணயம் வைத்துத் தெரிவுசெய்த ஜனாதிபதி இப்படி செய்வார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் யாரும் வாக்களிப்பு நிலையப்பக்கம் தலைவைத்து கூடப் படுத்திருக்கமாட்டார்கள்.
ஐந்து வருட பதவிக்காலம் நிறைவுறும் முன்னரே - இரண்டு வருடங்களும் எட்டு மாதங்களுக்குள் நாட்டைவிட்டே ஓடிவிட்டார் அந்த ஜனாதிபதி.
ஜனநாயகம் நிகழ்த்தும் வேடிக்கை
இப்போது மிகுதியுள்ள இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களுக்குமான காலப்பகுதியில் ஜனாதிபதிப் பதவியில் வீற்றிருக்க ஒருவர் தேவை. அதற்கான வாக்களிப்புக்கு இலங்கை தயாராகிறது.
மக்களை வேடிக்கையாளராக இருத்திவிட்டு பொதுத்தேர்தலின் போது மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றிற்கு அனுப்பபட்ட பிரதிநிதிகள் 225 பேரும் இந்த வாக்களிப்பில் ஈடுபடுவர்.
2 கோடி மக்களின் விருப்பினை வெறும் 225 பேரின் விருப்பிற்குள் உள்ளடக்கிவிட்டிருக்கும் ஜனநாயகப் பொறிமுறை நிகழ்த்தும் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று. பிடிக்கவேயில்லையாயினும் பார்த்தே ஆகவேண்டும். ஏனெனில் மக்கள் இந்த வேடிக்கைக்கான கட்டணங்களை ஏற்கனவே செலுத்திவிட்டனர்.
வெற்றுக்கடதாசிகளான தமிழர் வாக்குகள்
அந்தவகையில் தெற்கில் 'கோட்டாகோகம' போராட்ட சலசலப்பிற்குப் பின்னர் அரசியல் சூடுபிடித்திருக்கிறது. பெரும்பான்மையினரைப் பிரதிபலிக்கும் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகளும், பிளவுகளும் வழமைபோல நடந்தேறுகின்றன.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய தரப்புக்கள் என்ன முடிவெடுத்திருக்கின்றன? தமிழ், தமிழ் பேசும் முஸ்லிம் இனநலன் கருதி அக்கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவுதான் என்ன? தெற்கில் அரசியல் சூறை வீசும்போது தமிழர்களது வாக்குகள் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுவது வழமை.
அவ்வாறான வேளைகளில் வெற்றுக்காசோலைகளாக, எவ்வித பேரம்பேசலுமின்றி, அதனை விட்டுக்கொடுக்கும் அரசியல் பாரம்பரியமே வழமையாக முன்னெடுக்கப்படும். இம்முறையும் அதே நிலைதானா?
தமிழ் தேசியக் கட்சிகளது நிலைப்பாடுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தேர்தல் கூட்டமைப்புகள் வடக்கு, கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பில் பயன்படுத்தவென பத்து வாக்குகளை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம் ஆதரவு யாருக்கு என்ற முடிவினை இன்று அறிவிப்பதாகக் கூறியிருக்கிறது.
இதுவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தம் முடிவை அறிவித்திருக்கிறது. அதாவது தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் எதிர்பார்க்கப்படும் தீர்வுகளைத் தருவேன் என எழுத்துமூல உறுதிப்படுத்தலைத் தருபவருக்குத் தமது வாக்கினைத் தரலாம் என அறிவித்திருக்கிறது.
அந்தக் கட்சியிடம் இரண்டு வாக்குகள் உள்ளன. அதற்கு அடுத்து இடம்பெறுவது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகும். ஒரு வாக்கினை வைத்திருக்கும் அந்தக் கூட்டணி 'வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
சர்வதேச நிலைப்பாடு
தெற்கு பிளவுண்டு கிடக்கும் இவ்வேளையில் இந்த ஜனாதிபதித் தெரிவு மிக முக்கியமானது. போர் முடிவுடன் பூகோளப் போட்டியில் வசமாகச் சிக்கவைக்கப்பட்டுள்ள இலங்கையானது, இனி அதிலிருந்து மீண்டு வருவதெல்லாம் மிகச் சவாலானது.
சீனா ஒரு பக்கமும், அமெரிக்கா - இந்தியா மறுபக்கமும் நின்று இலங்கையை வைத்து நடத்தும் கயிறுழுப்பில் ஒட்டுமொத்த நாடுமே அரசியல், பொருளாதார, சமூக வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
இனிவரும் காலங்களில் இலங்கையின் அதிகாரக் கதிரையை சீனச் சார்புடையவர் கைப்பற்றினால், அது அமெரிக்கா - இந்தியாவுக்கு பிடிக்காது, அமெரிக்கா - இந்தியாவுக்கு சார்புடைய ஒருவர் கைப்பற்றினால் அது சீனாவுக்குப் பிடிக்காது என்கிற நிலைதான் நீடிக்கும்.
இந்த இரு அணிகளும் தாம் விரும்பும் தரப்பை ஆட்சிக் கட்டிலேற்ற நடத்தும் போட்டியின் காரணமாக ஆட்சிக் குழப்பங்கள் நீடிக்கவே வாய்ப்புள்ளது. 2010 ஆண்டிலிருந்து தெற்கின் அரசியல் சுழலும் மையப்புள்ளியாக ஆட்சி மாற்றங்களே இருந்திருக்கின்றன.
இந்த ஆட்சி மாற்றங்களின் பின்னால் மேற்கண்ட இரு சக்திகளினதும் பங்கேற்பு இருந்தமையை யாரும் மறுக்கமுடியாது. எனவே இனிவரும் நாட்களில் பெரும்பான்மை மக்களது புரட்சிகள், போராட்டங்கள், கலவரங்கள் சாதாரணமானவையாக வந்துபோகும்.
தெற்கு மேலும் மேலும் பிளவுபடும். அப்படியானதொரு அரசியல்பொழுதே தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைத் தமிழ் தேசியத்தை உட்சாறாக வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் இனநலன் கருதியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு
ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்புத் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருக்கும் நிலைப்பாடு தொடர்பில் இதுவரை எந்த வேட்பாளரும் வாய்திறக்கவில்லை. அப்படியாயின் குறித்த வேட்பாளர்களுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளது வாக்குகள் தேவையில்லை என்றே அர்த்தம்.
அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படும் தற்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரசிங்கவிற்கு பொதுஜன பெரமுவினரின் ஆதரவு உண்டு. நாடாளுமன்றில் 113 ஆசனங்களைக் கொண்டிருக்கும் அந்தக் கட்சியானது தெற்கில் மக்கள் மத்தியில் தலைகாட்டவே அச்சப்படும் சூழல் எழுந்திருக்கிறது.
எனவே இந்த அழுத்தங்களில் இருந்து தம்மை விடுவித்துவிடக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என்கிற நிலைப்பாட்டை அந்தக் கட்சி கொண்டிருக்கிறது. அதற்கு மிகப் பொருத்தமானவராக ரணில் விக்ரமசிங்க இருக்கிறார்.
எனவே அதிக பெரும்பான்மையுடன் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைக்க பொதுஜன பெரமுனவின் வாக்குகளே போதுமானவை. அதனைத் தாண்டி ரகசிய வாக்கெடுப்பின்போது ரணிலிடமிருந்து பிரிந்துசென்ற சிலரும் தம் எஜமானாராகிய ரணிலையே தெரிவுசெய்வர்.
இந்நிலையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாக்குகள் புதிய ஜனாதிபதிக்கு தேவையற்றது.
கோட்டபாய எப்படி தமிழர்களது வாக்குகளின்றி பெரும்பான்மையினரின் வாக்குகளால் மட்டும் அதிக பெரும்பான்மையுடன் சிங்கள மக்களுக்கு மட்டுமான ஜனாதிபதியாகினாரோ அதே போல ரணில் விக்ரசிங்கவும் பெரும்பான்மை ஆதரவுடன் பெரமுனவிற்கான ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.
தமிழர்களுக்கு எதுவுமில்லை
இந்நிலையில் இலங்கையின் அரசியல் குறித்த சர்வதேச நிலைப்பாடு, பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு ஆகியவற்றை சரியாகப் புரிந்து கொண்டு வடக்கு, கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், கூட்டணிகள் செயற்பட வேண்டும்.
இந்த ஜனாதிபதி தெரிவிற்குத் தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் ரணிலுக்குத் தேவையற்றது. சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும போன்றவர்களுக்கு மட்டுமே தேவைப்படும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சஜித் பிரமதாஸவை ஆதரித்த போதிலும், நிவாரணப் பொருள் உதவிகளைத் தவிர இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எவ்வித செயற்பாடுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.
எனவே தமிழர்கள் அவரை ஆதரிப்பதும், கோட்டபாயவை ஆதரிப்பதும் ஒன்றுதான். டலஸ் அழகப்பெருமவும் தமிழர் விடயத்தில் பெரிதாக அக்கறை காட்டாதவர். இவ்விருவரும் தமிழர்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு, காணாமலாக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறல், கடந்த காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நீதி, இராணுவமயமாக்கலுக்குத் தடை, பௌத்தமயமாக்கலுக்குத் தடை என்கிற விடயங்களை கணக்கிலும் எடுக்கமாட்டார்கள்.
சிங்கள தேசியவாதம் நலிந்துபட்டிருக்கும் இன்றைய நிலையில் இனிவரும் எந்த ஜனாதிபதிகளும் தமிழர் நலன்குறித்து துளியளவும் கணக்கிலெடுக்க வாய்ப்பில்லை.
தேவை தமிழ் ஜனாதிபதி
எனவே தமிழ் தேசியக் கட்சிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள், சர்வதேசப் பங்களிப்புடன் இடம்பெறும் இந்த ஜனாதிபதித் தெரிவை, தமிழர் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கானதொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் வரலாற்றில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழர்களுக்கு எதுவுமற்ற 19 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்து, அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டு துணை ஜனாதிபதியாகத் தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டாலும், அவருக்கு இருக்கும் அதிகாரங்களானவை, ஒரு காவலாளிக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தினளவை கூடக் கொண்டிராது.
வரலாற்றில் அரிதாக நிகழும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாய்ப்பை தமிழர் தரப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் அல்லது முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக நிறுத்தி தம் வாக்குகளை அவருக்கு அளிக்கலாம்.
அவர் வெற்றி பெற முடியாது எனினும், சிங்கள ஒற்றைமைய அரச நடைமுறையினுள் நாம் உள்ளடங்கவில்லை என்பதை உலகிற்குத் தெரியப்படுத்தவாவது இப்படியொரு பரீட்சார்த்த முயற்சியை செய்துபார்த்திருக்கலாம்.
புதிய தடம் குறித்து சிந்திப்போம்
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் ஆதரித்த பெரும்பான்மை இனத்தவரது ஜனாதிபதிகள், பிரதமர்கள் கொடுத்த வாக்குகள் எதனையும் நிறைவேற்றவில்லை.
எனவே தொடர்ந்தும் அதே தடத்தில் பயணிக்காமல் மாற்றுத் தடங்கள் குறித்தும் இந்தக் கட்சிகள் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற நடைமுறைக்குள் புதியதொரு அரசியல் பயணத்தை இந்தக் கட்சிகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களிலாவது ஆரம்பிக்க வேண்டும்.
தமக்கு வரும் வாய்ப்புக்கள் அனைத்தையும் தவறவிட்டு தொடர்ந்தும் பிறத்தியாரின் நிகழ்ச்சிநிரலில் ஓடிக்கொண்டிருக்காமல், இனநலன் கருதியும் தம் முதற்தடத்தை எடுத்துவைக்கவேண்டும்.