அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு 2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது
2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுக்கான வெண்கல பதக்கம் இவ்வாண்டு கிளிநொச்சி - அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்திற்கு கிடைத்துள்ளது.
நேற்று (23) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதே துறையில் இப்பாடசாலை மெரீட் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட நிலையில் இவ்வாண்டு விருது கிடைத்துள்ளது.
ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் திட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த தொழில்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதியளித்த பாடசாலைகள் ஆகியவற்றின் சமூக பங்கேற்பை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் வடிவமைக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 11வது விருது வழங்கும் நிகழ்வில் வட மாகாணத்தில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
