பிரச்சார நிதிச் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையகம் தீர்மானம்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையகம் பிரசார நிதி வரம்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில், கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை தயாரித்தல், வெளியிடுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்களின் விளக்கமளிக்கும் பணிகள் நாளைய தினம் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவிப்பு
அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், பொலிஸ் திணைக்களம், கையூட்டல் ஊழல் ஆணைக்குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், நிதிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அழைக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து வேட்பாளர்களின் பிரசார செலவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரசார நிதி வரம்புகள் குறித்து அரசியல் கட்சி செயலாளர்களுக்கு
தெரிவிக்கப்பட்டு, செலவுக்கான கட்டுப்பாடுகளை தங்கள் கட்சிகளுக்கு
தெரிவிக்குமாறு வலியுறுத்தப்படும்.
அத்துடன் தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கும், செயல்படுத்தும் செயல்முறை குறித்து விளக்கப்படும் என்றும் அவர், தெரிவித்துள்ளார்.
இதன்படி முன்னதாக தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் யோசனை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |