நாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணத்தொகுப்பு! சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி
புதிய இணைப்பு
அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தொகுப்பை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கான பல நிவாரணத்தொகுப்பை அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிவாரணம்
அதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓவ்வொரு டீசல் லீற்றருக்கும் 100 ரூபாய் நிவாரணமும் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படவுள்ளன.
இதற்காக மாதம் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாதங்களுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு
மேலும், குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரையும், 10,000 ரூபாய் கொடுப்பனவு 15,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாகவும், குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
உர மானியம் கொடுப்பனவு
ஒரு ஹெக்டேயருக்கு 25,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 30,000/- ரூபா வரை அதிகரித்தல்.
மேலதிக பயிர்களுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 18,000/- ரூபா வரை அதிகரித்தல்.
விவசாயிகளுக்கு, விவசாய சேவை மையங்கள் ஊடாக யால பருவ செய்கைக்காக 50 கிலோகிராம் யூரியா உர மூட்டை ஒன்றினை 10,200/- ரூபா நிலையான விலையில் வழங்குதல்.
மீனவர் மானியம்
ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு, ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம் மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 25 நாட்களுக்கு, ஒரு லீற்றர் எரிபொருளுக்காக 50 ரூபா என்ற அடிப்படையில் 3 மாத காலத்திற்கு மானியம் வழங்குதல்.
எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு 150,000/- ரூபா வீதம் ஒரே தடவையில் கொடுப்பனவு வழங்குதல்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடலுக்குச் செல்லும் இந்த கடற்றொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் .
இரண்டாம் இணைப்பு
அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு சற்றுமுன்னர் வருகை தந்து நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று(7) கூடிய போது தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,
தற்போதைய உலகளாவிய போர்ச் சூழ்நிலையால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அதற்கு கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீட்டர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த அண்மைய தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு அடிப்படையிலான விலைக் சூத்திரத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். அந்தச் செலவு முந்தைய மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உண்மையான செலவைக் கணக்கிட்டு, ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.
இதன்படி கணக்கிடும் போது, ஒரு மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய், அதாவது 2,000 கோடி ரூபாய் செலவாகும். மூன்று மாதங்களுக்கான இந்த முன்மொழிவை நாங்கள் தயாரித்துள்ளோம். இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே இந்த மானியங்களை நாம் வழங்க வேண்டும்.” என்றார்.
இருப்பினும், முறையான தரவுகள் இல்லாததால், சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் விலைகளை சந்தை விலைக்கு ஏற்ப சரிசெய்ய முடிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளாமல், 2026 ஏப்ரல் மாதத்திற்காக மேலதிக விசேட கொடுப்பனவை வழங்கவம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி,வறுமைப்பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 7,500 ரூபாயும், ஏழ்மையான பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபாயும், இடைநிலைக் குடும்பத்திற்கு ரூ. 2,500 ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் (7) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய போர்ச்சூழ்நிலையால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிசக்தி குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாகவும், எரிபொருள் விலை சரிசெய்யப்படும்போது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.