சட்டத்தினால் மாத்திரம் அமைதியை நிலைநாட்ட முடியாது..! ஜனாதிபதி சுட்டிக்காட்டு
உலகுக்கு அமைதியின் செய்தியைப் பறைசாற்றும் நோக்கில் வியட்நாம் தேரர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிக்குகள் முன்னெடுத்த 'எஹிபஸ்ஸிகோ' அமைதி நடைபயணத்தின் அரச நிறைவு விழா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்று(28.04.2026) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.
7 நாட்கள் அடங்கிய நடைபயணம்
வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான 12 வெளிநாட்டுத் தேரர்கள், கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளையில் இந்தப் பயணத்தை ஆரம்பித்தனர். 7 நாட்களில் 210 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து நேற்று(28) கொழும்பை வந்தடைந்த இக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரலாற்று நிகழ்வின் முத்தாய்ப்பாக, புனித தந்ததாதுவின் பிரதி மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்று என்பவற்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பஞ்ஞாகர தேரரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். அமெரிக்காவில் பௌத்த தர்மத்தைப் பரப்புவதற்கான அடையாளமாக இவை கொண்டு செல்லப்படவுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
"செல்வம் அல்லது இயந்திரத் தொழில்நுட்பத்தில் நாம் முதலிடம் பிடிக்க முடியாவிட்டாலும், மனிதாபிமானத்தில் உலகிலேயே முதன்மையான தீவாக இலங்கையை மாற்ற முடியும். அதற்கான அறநெறிப் பண்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மதத் தலைவர்களுக்குப் பாரிய பங்கு உள்ளது.
வரலாறு உணர்த்தும் உண்மை என்னவென்றால், நாட்டில் எப்போதெல்லாம் மத மற்றும் அறநெறி எழுச்சி ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் பொருளாதாரமும் செழிப்படைந்துள்ளது.

இன்று நிலவும் நம்பிக்கையீனங்களைப் போக்கி, தர்மத்தின் சாரத்தைப் பாதுகாக்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். நீண்டகாலப் போரினால் பேரழிவைச் சந்தித்த நாடு என்ற ரீதியில் அமைதியின் பெறுமதியை நாம் அறிவோம்.
சட்டத்தினால் மாத்திரம் அமைதியை நிலைநாட்டிவிட முடியாது. மக்களின் மனமாற்றமும் அறநெறிப் பண்புகளுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்றார்.
புனித தாது கையளிப்பு
பஞ்ஞாகர தேரர் உரையாற்றுகையில்,
அமைதி என்பது வெளியில் இருந்து வருவதல்ல, அது உள்ளிருந்து உருவாக வேண்டியது. இலங்கை மக்கள் காட்டிய அன்பும் மரியாதையும் இந்தத் தேசத்தின் உண்மையான வலிமையை எனக்கு உணர்த்தியது என்றார்.

மெல்பிட்டியே விமலக்கித்தி தேரர் உரையாற்றுகையில்,
எதிர்காலத்தில் அமெரிக்காவில் பௌத்த மதம் பற்றிப் பேசப்படும்போது, இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் போதிக்கன்று மற்றும் புனித தாது தொடர்பான நிகழ்வு ஒரு வரலாற்றுத் தருணமாக நினைவுகூரப்படும் என்றார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், அமைச்சர்களான ஹினிதும சுனில் செனவி, ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாதுகாப்புப் படைப் பிரதானிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





