ரணில் இரட்டை நாடகத்தை நடத்துவதாக சுகாஷ் காட்டம்
ஜனாதிபதி, ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விகாரைகளை கட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதியம் (04.01.2024) போராட்டத்தில் ஈடுபடுகின்ற வேளையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் ஏவி விடப்படுவதோடு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் சித்திரவதை மற்றும் கொலை செய்யப்படுகிறார்கள்.
பொலிஸாரின் வன்முறை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை மறுத்து, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டு விட்டு, தமிழர் தாயகத்திற்கு வருகின்ற ரணில் விக்ரமசிங்கவினுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த போராட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வலியுறுத்துகின்ற ஒரு போராட்டம். ஆனால் இந்த ஜனநாயக போராட்டத்தின் மீது பொலிஸாரால் எதேச்சதிகாரமும் வன்முறையும் திட்டமிட்டு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடன் போராடிக் கொண்டிருந்த பெண்களை தாக்கி இழுத்துச் சென்று மற்றும் எங்களுக்கு முன்னால் ஒரு பேருந்தை நிறுத்தி, எங்களுடைய புகைப்படங்கள் கூட வெளியே வரக்கூடாது என்ற நோக்கில் பொலிஸார் செயற்படுகிறார்கள்.
தொடர்ந்தும் போராடுவோம்
இதிலிருந்து இலங்கை பொலிஸாரின் வன்முறை நடவடிக்கைகளை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களின் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை, சர்வதேச விசாரணை நடக்கின்ற வரை எங்களுடைய குரல்கள் ஓயாது.
நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்பதோடு ரணில் விக்ரமசிங்கவினதோ, ராஜபக்சகளினதோ நாடகங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பலியாக மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




