ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி!
மீலாதுன் நபி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
வாழ்த்து செய்தி
குறித்த வாழ்த்து செய்தியில், நேர்மையான மனிதர்களுக்கு இறைவன் உதவி புரிகிறார் என்பதையும், அத்தகையவர்கள் இறைவனால் பொருத்தமான, உயர்ந்த இடங்களுக்கு உயர்த்தப்படுவதையும் முஹம்மது நபி அவர்களுடைய வாழ்க்கை மற்றும் தத்துவத்தைப் பற்றி ஆராய்ந்தால் புரிந்துகொள்ளலாம்.
மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த முஹம்மது நபியவர்கள், அல்-அமீன் என்று (நம்பிக்கையானவர்) அழைக்கப்பட்டார்.
அடிப்படை போதனைகள்
பரஸ்பர புரிதல், நேர்மை, நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்காதிருத்தல் போன்றவை இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் அடிப்படை போதனைகளின் மையக்கருவாக அமைந்திருந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) எடுத்துக் காட்டிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து வகையான அடிப்படைவாதத்தையும் முறியடித்து சிறந்த, முன்னேறிய உலகை உருவாக்குவதற்கான உறுதியுடன் உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் கைகோர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த மீலாத்துன் நபி தினம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.