யால சரணாலய விவகாரம்! ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவு
அதன்படி குறித்த நபர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (26.10.2022) இடம்பெற்றிருந்தது.
இதன்போது யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் போதே பந்துல குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை
அதற்கமைய இதனுடன் தொடர்புப்பட்டவர்களில் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்கி, அரசியல் அழுத்தங்கள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் நபர்களையும், அவர்கள் பயணித்த வாகனங்களையும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் எந்தவொரு சரணாலயத்திற்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயம், வனஜீவராசிகள், வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.