ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்: அனுரகுமார வலியுறுத்து
தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய திஸாநாயக்க, நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17இற்கு இடையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கனடாவில் உள்ள இலங்கையர்கள் விமான அனுமதிச் சீட்டுக்களை முன்பதிவு செய்யுமாறு திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சித்தால் எதிர்பார்த்ததை விட விரைவில் பதவி விலக நேரிடும் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரச்சினைகளை பொறுமையாக தாங்கிக்கொண்டு பொதுத்தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே இலங்கை மக்கள் மத்தியில் உள்ள எண்ணமாக உள்ளது.
அச்சுறுத்தல்
மேலும், தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து அரச புலனாய்வு சேவை அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில் இரண்டு முக்கிய விடயங்கள் எடுத்துக்காட்டப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், தேசிய மக்கள் சக்தியை சுற்றி குவிந்து வருகின்றனர் என்பதோடு கட்சியில் ஓய்வு பெற்ற கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குழுவாக இருப்பது அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது என்ற விடயங்களே அந்த அறிக்கையில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |