ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு பயணம்! பல பிரச்சினைகளுக்கு தீர்வு
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (22.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று யூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உல்லாச பயணங்களை விருத்திசெய்ய ஏற்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.
இதற்கமைய முல்லைத்தீவு மக்களின் பொழுதுபோக்குக்காக பகுதி அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பொழுது போக்கமையத்தினை திருத்துவதற்கு நிதி உதவியினை வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உல்லாச பயணத்தினை விருத்தி செய்வதற்கான திட்டம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவுள்ளது.
வாகன புத்தகங்கள்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் ஜூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சேவையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவையினையும் பெற்றுக்கொள்ளலாம்,வாகனங்களுக்கான பத்தகங்கள் மற்றும் உடமை மாற்றும் செயற்பாடுகள் என்பன உடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுவரை விண்ணப்பித்தும் உடமை மாற்று மற்றும் வாகன புத்தகங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் சென்று விண்ணப்பங்களை கொடுப்பதன் ஊடாக நடமாடும் சேவை ஊடாக தங்கள் பதிவு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கவீனங்களை இழந்த நிலையில் அதிகளவில் வாழ்கின்றார்கள்.
இதனை கருத்தில் கொண்டு மாற்று வலுஉடையவர்கள் சாரதி அனுமதிபத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
எழுத்தறிவு இல்லாதவர்களும் தங்கள் வாகன அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்காக வாய்மொழி பரீட்சை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு வைத்தியசாலை
வட மாகாணம், போரால் பாதிக்கப்பட்ட மாகாணம். இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர், போரால் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் என பலர் உள்ளனர்.
போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதார தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த சுகாதார துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.
இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட புனர்வாழ்வு வைத்தியசாலையினை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1300 மில்லியன் ரூபா செலவில், 2015 ஆம் ஆண்டு புனர்வாழ்வு வைத்தியசாலையை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதற்பகுதயில் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி புனர்வாழ்வு வைத்தியசாலையை திறந்துவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் சேவை
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் ஜீலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
போரின்போது உயிரிழந்தவர்கள் சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டு கொடுப்பனவும், திருமணபதிவு சான்றிதழ்,பிறப்பு பதிவு சான்றிதழ்,தேசிய அடையாள அட்டை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களும் அன்று பெற்றுக்கொள்ளலாம்.
குறித்த சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தற்போது தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
மக்களுக்கான அனைத்து சேவைகளையும் உடன் பெற்றுக்கொள்வதற்காக இந்த நடமாடும் சேவையில் மக்களை பங்குகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |