நெருக்கடிகளை வெற்றி கொள்ள நல்லூர்க் கந்தனைப் பிரார்த்திக்கும் ஜனாதிபதி ரணில்
இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றி கொண்டு, அனைவருக்கும் நலம்நல்க நல்லூர் கந்தனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பிரார்த்தனைச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும், பல வரலாற்றுச் சிறப்புக்களையும் மகிமைகளையும் கொண்ட கந்தசுவாமி கோயில் திருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடந்து வருகிறது.
இம்முறை இன்று கந்தப்பெருமான் தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா விசேஷமானது.
இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடும் திருவிழா
இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் இன, மத பேதங்களைக் கடந்து இலட்சக்கணக்கில் பக்தர்கள் இதன்போது ஒன்றுகூடுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
இந்துக்களோடு சிங்கள பௌத்த மக்களும் ஏனைய சமயத்தவர்களும் தவறாது வழிபட்டு ஆசிபெறும் நல்லூர் கந்தனின் சிறப்பானது, இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான உறவு வலுப்பெற உதவுகிறது.
'நாட்டின் நெருக்கடிகளை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது. இந்த தருணத்தில் இலங்கையில் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் விலகி, சுபீட்சமான வாழ்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் நலம் நல்க நல்லூர் கந்தனை அனைவருமாக ஒன்றுகூடி பிரார்த்திப்போம்' என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.