யாழில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி (Photos)
யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று (04.01.2024) மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஜனாதிபதி உரையாற்றுகையில்,
“மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்பதால் அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது.
பொருளாதார வளர்ச்சி
அதேபோல், அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி,
பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும்.
மேலும், 2019ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் மற்றும் 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.
அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை எமக்கு கிட்டியது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்தது.
இவ்வாறு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதோடு இந்த இரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வருடங்களாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவே, இந்த வருடத்தில் வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. போதியளவு வருமானம் உள்ள பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியம்.
அதேபோல் நாம் வரவு செலவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகத்தினர்
இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல சிவில் சமூகத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









