சீனாவை தாய்வான் தூண்டவில்லை..! புதிய ஆயுத தளவாட ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி லாய் சிங்-தே விருப்பம்
தாய்வான் தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ஏற்க மறுப்பதும் சீனாவைத் தூண்டிவிடும் செயலாகக் கருதப்படக் கூடாது என தாய்வான் ஜனாதிபதி லாய் சிங் தே தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் புதிய ஆயுத விற்பனைத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்வானில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தில் (TFCC) பேசிய அவர், சீனாவுடன் சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், ஆனால் தாய்வானிய மக்கள் மட்டுமே தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்றும் அழுத்தமாகக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் பாதுகாப்பு அரண் குறித்த கவலைகள் எழுந்தபோதிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு கடப்பாடுகள் மாறவில்லை என்றும், தாய்வான் தனது பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் இருந்து பின்வாங்காது என்றும் ஜனாதிபதி லாய் தெளிவுபடுத்தியுள்ளார்.
தாய்வான் - சீனா இணைவு
ஜனாதிபதி லாயின் இந்த கருத்துக்களை நிராகரித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தாய்வான் விவகாரம் முழுக்க முழுக்க சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், சீனாவுடன் தாய்வான் இணைவது வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதது என்றும் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம், கண்காணிப்பு பணிகள், கடலோர தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா சிறிய ரக ட்ரோன்களுக்காக 210 பில்லியன் தாய்வான் டொலர் ($6.66 பில்லியன்) மதிப்பிலான புதிய சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
சீனா தங்களுக்கு எதிரான இராணுவ பலப்பிரயோகத்தைக் கைவிட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி லாய், தாய்வான் ஆயுதங்களை வாங்குவது தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் விருப்பத்தை உலகிற்கு உணர்த்துவதோடு, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri