ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும் அனைத்து, இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார், மேலும் இந்த கலந்துரையாடல் 04 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் வைத்திருக்கும் கொள்கை முடிவுக்கு இணங்க, பணிப்பாளர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட வர்த்தகத் திட்டத்தின் இலக்குகளை அடைவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, பணப்பாய்வு முகாமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நட்டம் அடையாத நிறுவனமாக கட்டியெழுப்ப, அதன் அனைத்து தரப்பினரின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டுப் பங்களிப்பு இல்லாமல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை கட்டியெழுப்ப முடியாது என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டுச் செலவுகளுக்காக தொடர்ந்தும் திறைசேரியிடமிருந்து நிதியைப் பெற முடியாத சூழலில், நிறுவனத்திற்குள்ளேயே நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அரசியல் அதிகாரத் தரப்பு என்றவகையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்வதாகவும், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தைக் கட்டியெழுப்புவது அதன் அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 20 பி. ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது இலங்கை மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் என்பதால், அந்தப் பணத்தை செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவது அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசாங்க உரிமையின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை நட்டம் அடையாத வணிகமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை அடைய தொழிற்சங்கங்கள் முழு ஆதரவையும் வழங்கும் என்றும், இதுவே தமது முதன்மை நோக்கமுமாகும் என்றும், இதில் பங்கேற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சரத் கணேகொட உட்பட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கன் விமானிகள் சங்கம்,விமான நிறுவன ஊழியர்கள் சங்கம், உரிமம் பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கன் விமான சேவை விமான தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம், விமான பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கம், நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிர்வாக ஒன்றியம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
