கடும் எரிபொருள் நெருக்கடி - புடினுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு
ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கூற்றுப்படி, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜூலை 10ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்தியாவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
தற்போது, அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் பல நாடுகளை அணுகி வருகிறது.
கத்தார் சென்ற அமைச்சர்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் ஏற்கனவே கத்தாருக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து கத்தார் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கவும் சென்றுள்ளனர்.
கத்தாரின் எரிசக்தி விவகாரங்களுக்கான அமைச்சர், கத்தார் எரிசக்தியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாத் ஷெரிடா அல்-காபியை அவர்கள் சந்தித்தனர்.
நாட்டின் அரசாங்கத்திற்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான கத்தார் எனர்ஜி மற்றும் கத்தார் டெவலப்மென்ட் ஆகியவற்றின் உதவியுடன் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வழங்குவது குறித்து அமைச்சர்கள் விவாதித்துள்ளனர்.
இலங்கைக்கான பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி தொடர்பான கலந்துரையாடலுக்காக அமைச்சர் விஜேசேகர அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தையும் சந்தித்தார்.
கத்தாரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் ஹமத் பின் காசிம் அல்-அப்துல்லா அல்தானியுடன் மின்சாரம், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர் கலந்துரையாடினார்.