அரசியல் தீர்வு விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி : தமிழ் எம்.பி புகழாரம்
இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரவை சந்தித்த போது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) ஆற்றிய தனது முதல் உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம். ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவு வழங்குவோம்.
ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை
சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு பொதுநலவாதி. தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன, மத, குல வேறுபாடு எனக்கில்லை.
ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள் அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள்.
அதனாலேயே எமது நாட்டின் தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை. ஆனால் மதிப்பளிக்கின்றோம்.
இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உள்ளது.
ஆனால், அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.
நான் விரும்பும் தேசிய கீதத்தையும் நான் விரும்பும் தேசியக் கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது.
அரசியல் கைதிகளுக்கான விடுதலை
இந்தநிலையில், பொருளாதார பிரச்சினை ஏற்பட காரணம் நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மையால் ஆகும்.
யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகி விட்டது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை. அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது.
அதேநேரம் பல நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவமுகாம் உள்ளது. இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள்.
அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள். மகாவலி - எல் வலயத்தில் மூவின மக்களிற்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள்.
திட்டமிடப்படாத கட்டுமானங்கள்
மேலும், ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும், இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்த போது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்ட போது, வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலும் சில வார்த்தைகள் சொல்ல எண்ணுகிறேன். திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும், அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும்.
பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |