நுவரெலியாவை குறி வைக்கும் ரணில் - ஏற்படவுள்ள பல மாற்றங்கள்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாதென பலர் நம்பிய போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் குறித்த புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிட்டியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் விடயத்தில் சுற்றுலா நகரமாக திகழும் நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை உயர்ந்தபட்சம் பெற்றுக் கொள்வதற்கு முறையான திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.
நான்கு வருடங்களுக்குள் நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இது துணைபுரியும். நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார்.
நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது நுவரெலியா புதிய நகர அபிவிருத்தித் திட்டமும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
பாரிய கட்டடங்களுக்குப் பதிலாக ஓய்வைக் கழிக்கக் கூடிய வகையில் ரம்மியமான சூழலுடன் அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும். பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் சென்று நாட்டுக்குத் தேவையான புதிய வேலைத்திட்டத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
நுவரெலிய நகரில் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான திட்டம் இல்லாமலிருப்பது நீண்டகாலப் பிரச்சினையாகும். இதற்காக துரித வேலைத்திட்டமொன்றை வகுக்கும் அதேவேளைரூபவ் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
மத்திய அதிவேக பாதையின் நிர்மானப் பணிகள் நிறைவடைந்ததும் நுவரெலியா
நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும்
ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.