ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹரின்
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் வேட்பாளராக போட்டியிடும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ இணையத்தளம் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
"எதிர்காலத்தில் நானும் நாமல் ராஜபக்சவும் ஓரிடத்திற்கு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நாமல் ராஜபக்சவே எனக்கு சவாலாக இருப்பார்.
அரசியல் பயணத்தில் எதிர்காலத்தில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நானே இருப்பேன். நாமல் ராஜபக்சவுடன் கோபித்துக்கொள்ளக் கூடிய காரணங்கள் எதுவுமில்லை" எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
அதேவேளை ஹரின் பெர்னாண்டோ தனது ஜனாதிபதி கனவுக்கான பிரசாரங்களை சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை ஒரு வருட காலத்திற்கு பெற்றுக்கொள்ள போவதில்லை என அறிவித்தார்.
இதனை உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் நாடாளுமன்ற செயலாளருக்கும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹரின் பெர்னாண்டோவின் ஜனாதிபதி பதவி கனவுக்கான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள செல்வந்தர் ஒருவர் பணத்தை செலவிட்டு வருவதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.