சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர
சீனாவுக்கான (China) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாக உள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார நாளை (14) முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் சீன இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு
இதன்போது சீனாவில் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதோடு பல உயர்மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை மேலும் வலுப்படுத்துவதில் ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் ஊடாக இரு தரப்புகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |