ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் இன்று முக்கிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியிலுள்ள இந்தியப் பிரதமர் அலுவலகம் இன்று பிற்பகல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இருவரும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபை விவகாரத்தையொட்டி உரையாடினர் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்துள்ளன.
எனினும், சர்வதேச அமைப்புகளில் இரு நாட்டு ஒத்துழைப்புக் குறித்து இருவரும் உரையாடினர் என்று சாரப்பட இந்தியப் பிரதமரின் அலுவலக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது ஜெனிவா விவகாரம் தான் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். "இரண்டு நாடுகளுக்கும் இடையில் இரு தரப்புகள் மற்றும் பல தரப்புகள் சம்பந்தப்பட்ட சர்வதேச அரங்குகளில் தற்போது பேணும் ஒத்துழைப்பு உட்பட பல தரப்பட்ட விடயங்களை மேலோட்டமாகப் பேசியுள்ளனர்.
இப்போதைய கோவிட் சவால் உட்பட்ட விடயங்களில் இரண்டு நாடுகளின் உரிய அதிகாரிகள் ஒழுங்கு முறையான தொடர்பாடலைப் பேண வேண்டும் என இருவரும் இணங்கியுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான முக்கியத்துவத்தை இலங்கை முதன் நாடாக உள்ளது என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியப் பிரதமரின் அலுவலகச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.