மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் - மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகை
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்று(11.08.2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மடுவில் இடம் பெற்ற மடு பெருவிழாவிற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருவிழாவுக்கான ஆயத்தங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பெரு நிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் முறைகள் வழிபாடுகளுக்கான சட்ட திட்டங்களுக்கு ஒப்பாக மடு விழாவை சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசு உதவி எமக்கு தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.

அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து அதற்கமைய இந்த திருவிழாவுக்கான ஆயத்தங்களை பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்து வருகிறோம்.
இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியம். சுகாதாரம், மருத்துவம், சாரணர் சேவை, ஜோன் ஆம்புலன்ஸ், கழிவு அகற்றும் நடவடிக்கை,பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மின்சாரம், உணவு மற்றும் கடைகள், போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்கள் போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியம் தேவையானது.
சட்ட திட்டங்கள்
மடு திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. சில சட்ட திட்டங்கள் மடு திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கிறது.
இந்த சட்டத்திட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கிறோம். இந்த பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் ஒருமித்து செயற்பட்டால்தான் சிறந்த முறையில் நடத்த முடியும். அதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இங்கு கழிவு அகற்றுதல் மற்றும் பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகிறது. சில கடைகள் இந்த மடுத்திருத்தல பகுதிக்குள் வர முடியாது.
ஐஸ்கிறீம் வியாபாரம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மடு எல்லைப் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.