எதிர்வரும் நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவை: சிறீதரன் காட்டம்
தற்போதைய நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் இளைஞர்களையும், இளைஞர்கள் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து அவர்களை குற்ற புலனாய்வு துறை மற்றும் ராணுவ புலனாய்வு ஊடாக விசாரணை என்ற பெயரில் தன்னுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்து இருக்கின்றது.
அச்சுறுத்தலின் ஒரு கட்டம்
அண்மைக்காலமாக செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவது இதனுடைய ஒரு கட்டமாக காணப்படுகிறது.
பல இடங்களில் இளைஞர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவதுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற பல அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு என அழைத்து அவர்களை கடுமையான விசாரணையின் பிற்பாடு பயமுறுத்தி அச்சுறுத்தி விடுகின்ற செயற்பாடுகளையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக இவ்வாறான செயற்பாட்டை அவதானிக்க முடிகின்றதுடன் இது அரசாங்கத்தினுடைய ஒரு கையாளாகாத தனத்தை காண்பிக்கின்றது.
மாவீரர் நினைவு
குறிப்பாக நவம்பர் மாதத்தில் தமிழீழத்தில் மண்ணுக்காக தங்களுடைய இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவில் கொள்வதால் இம்மாதம் தமிழர்களுடைய உணர்வோடு சேர்ந்த ஒரு தேசிய மாதமாக கருதப்படுகின்றது.
அவ்வாறான இந்த மாதத்திலே குடும்பத்தவர்கள் மற்றும் சகோதரர்கள் தங்களுடைய உறவுகளுக்காக விளக்கேற்றுகின்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது அவற்றை அச்சுறுத்தும் வகையில் தான் அரசாங்கம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து இருக்கின்றது.
தான் ஒரு லிவரல்வாதி, நிலைமாறாக் கால நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் வணக்கங்கள் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை மற்றும் அண்மைய நாட்களில் அமெரிக்கா சென்று அமெரிக்காவில் கூட நான் எல்லா வணக்க முறைகளுக்கும் வாசலை திறந்து விட்டிருக்கும் தமிழ் மக்களை அரவணைத்து செல்லுகின்றேன் என்றெல்லாம் கூறுகின்ற இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அவருடைய பாதுகாப்பு துறையும் படைகளும் மிக மோசமாக இளைஞர்களையும், யுவதிகளையும் விசாரணைக்கு அழைத்து இருப்பது ஒரு பயங்கரமான செயற்பாட்டை முன்வைக்கின்றது.
குறிப்பாக அவர்கள் தாங்கள் வணக்க முறைகளை செய்கின்ற இந்த காலகட்டத்தை பயன்படுத்தி, முகநூல்களில் வெளிவருகின்ற செய்திகள், மற்றும் சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகள் மற்றும் படங்களை வைத்துக் கொண்டு அவற்றை விசாரணைக்கு முற்படுத்த முனைகின்றார்கள்.
இடங்கள் கபளீகரம்
மயிலத்தமடு, மாதவனை போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாக அரசாங்கத்தாலும், அரச படைகளாலும் குறிப்பாக பிக்குமார்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களில் பிக்குமாரினால் தமிழர்களுடைய இடங்கள் கபளீகரம் மற்றும் வன்பறிப்பு செய்யப்படுவதுடன் அவர்கள் அந்த இடங்களிலே மக்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளும் மிகப்பெரிய அளவிலே இடம்பெற்று வருகின்றது.
இந்த நாட்டின் ஜனநாயகம் செத்து, நீதி செத்து இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த இனத்துக்குரிய ஒரு நாடாக அல்லது அவர்களை மட்டுமே கையாளுகின்ற ஒரு நாடாக, ஏனைய இனங்கள் வாழ முடியாத பன்முகத்தன்மை இல்லாத ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்தி செல்வதையே அண்மைக்கால போக்குகள் மிகத் தெளிவாக காட்டுகின்றன.
முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா பதவியில் இருந்து விலகியமை, பொலிஸாரின் அண்மைக்கால நடவடிக்கைகள், திருகோணமலையில் பிக்குமாரால் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் அமைக்கப்படுகின்ற விகாரைகள், அதற்கு எதிராக தமிழ் மக்கள் குரல் கொடுக்கின்ற போது அவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகள் மற்றும் அதை செய்தி சேகரிக்க செல்லுகின்ற பத்திரிக்கையாளர்களை அந்த இடத்தை விட்டு அகற்றுகின்ற நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகள் தம்மை ஒரு முழுமையான அச்சத்துக்குள் வைத்திருப்பதயே காட்டுகின்றன.
குறிப்பாக வடக்கு, கிழக்கிலே இராணுவ பிரசன்னங்களோடும், பொலிஸ் படைகளின் பிரசன்னங்களோடும் சிங்கள குடியேற்ற வாசிகளை, இந்த மண்ணை கபளீகரம் செய்யும் வகையில் பிக்குமார் தலமையில் கொண்டுவந்து அரசாங்கம் முன்னிறுத்துகின்றது என்பதே, இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றது.
ஆகவே இந்த நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தான நாட்களாகவும், தொடர்ந்து அவர்களை அச்சுறுத்துகின்ற நாட்களாகவும் அமைந்திருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 14 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
