மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணிலும் முன் நிறுத்தப்படலாம்!.. நாமல் ராஜபக்ச அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, கண்டிக்கு (Kandy) விஜயம் செய்து மல்வத்து பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை நாங்கள் இறுதியான தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை.
மாற்றமடையும் உலகம்
எங்கள் கட்சியின் சார்பில் களமிறங்க பல வேட்பாளர்கள் உள்ளனர். ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickramasinghe) அவர்களில் ஒருவராக உள்ளார்.
எனவே, மொட்டுக் கட்சியின் சார்பில் அவர் களமிறக்கப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. தற்போதைய உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது.
அரசியல் நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முன்னர் இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்து எதிர்ப்பு வெளியிட்ட ஜே.வி.பி. தலைவர்கள் இன்று இந்தியாவுக்கு பயணம் செய்து அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.
கொள்கை நிலைப்பாடு
எங்களது மொட்டுக் கட்சி, கொள்கை நிலைப்பாடு ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அரசியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிதானமான முறையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற ரீதியில் எந்தவொரு தீர்மானத்தையும் எங்கள் கட்சி மேற்கொள்ளாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |