ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம்: முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து வெளியான தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர், எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஒரு கூட்டு ஆணையத்தை உருவாக்குவது இந்த விஜயத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த கூட்டு ஆணையத்தை உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் அடுத்த வாரம் கோரப்படும். இந்தநிலையில் 2025 பெப்ரவரி 10 முதல் 13 வரை நடைபெற உள்ள இந்த விஜயத்தின் போது வேலை வாய்ப்புகள், சுற்றுலா மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்களும் எட்டப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அரசாங்கத்துக்கு அரசாங்கம் இடையிலான திட்டங்கள் கையெழுத்திடப்பட உள்ளன, மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சாதகமான எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி குறித்த பேச்சுவார்த்தைகள் இந்த விஜயத்தின் முன்னுரிமைகளில் அடங்கும் என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.
துபாயில் 350,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இந்தநிலையில், ஜனாதிபதி திஸாநாயக்க துபாயில் உள்ள இலங்கை சமூகத்தினரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
