வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(16.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
சிலர் படுகாயம்
35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.