போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ள காலிமுகத்திடல் போராட்டக்களம்! நாடாளுமன்றில் கடும் விமர்சனம் (Live)
காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கோட்டா கோ ஹோம்' அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
போராட்டங்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமரின் அறிவிப்பு |
நோக்கம் நிறைவேறிய பின்னரும் தொடரும் போராட்டம்
அவர் பதவி விலகி அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியும் தெரிவுசெய்யப்பட்டார். எனினும், தமது நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் தொடர்கிறது. இது நியாயமற்றது. நாட்டை சீர்குலைத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் இடமாக அது இருக்கக்கூடாது.
அமைதி போராட்டக்காரர்களுக்கு பின்னால் ஒழிந்துகொண்டு இந்த போராட்டத்தை பாதாள உலக குழுவினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமே முன்னெடுக்கின்றனர். இதற்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கினர். அதனூடாக அவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
போராட்டக்காரர்கள் என்று கூறுபவர்கள், ஜனாதிபதி மாளிகையின் வேலிகளை திருடினர். ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்தினர். இவர்களா இந்த நாட்டை கட்டியெழுப்பப் போகிறார்கள்?.
தற்போது, கோட்டாபயவின் பெயரை நீக்கி வேறுசிலரை துரத்துவதற்கு போராட்டம் நடக்கிறது. துறைமுகம், உயர்தர சுற்றுலா விடுதிகள், துறைமுக நகர் போன்ற பொருளாதார கேந்திரங்கள் அமைந்துள்ள இடத்தை அண்டி போராட்டம் நடத்தப்படுவதால் நாளைய முதலீடுகளை அது பாதிக்கக்கூடும்.
கலகத்தினால் ஆட்சிக்குவர முயற்சி
வாக்குகளால் அதிகாரத்துக்கு வரமுடியாது என அறிந்துள்ள சில அரசியல்வாதிகள் கலகத்தினால் ஆட்சிக்குவர முயற்சிக்கின்றனர். இத்தகைய போராட்டங்களை பார்க்கும் வெளிநாட்டினர் முதலீட்டுக்கு தகுதியற்ற நாடாக எம்மை கணிக்கக்கூடும். தற்போது, உண்மை பேராட்டக்காரர்கள் விலகியுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர்களும், பாதாள உலகக்குழுவினருமே தற்போது போராட்டத்தை வழிநடத்துகின்றனர். கடந்த வார சம்பவத்தின் பின்னர் சிலர் இராணுவத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர். அவர்கள் மக்களையும் எம்மையும் பாதுகாப்பதற்காகவே போராடுகின்றனர்.
விடுதலைப் புலிகளுடன் போராடி இராணுவத்தினர் அவர்களை தோற்கடித்தனர். எனினும், அமைதி போராட்டங்களுக்கு அவர்கள் மதிப்பளித்தனர். இறுதியில் மிகவும் கேவலமாக அவர்களை போராட்டக்காரர்கள் நடத்தினர் என குறிப்பிட்டுள்ளார்.